பதினான்கு வருடங்களுக்கு முன்னர் சுவிஸில் தனது முன்னாள் ஜோடியான 23 வயது இளம் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, போலி அடையாளப்படுத்தலுடனும் போலி ஆவணங்களுடனும் நியூஸிலாந்துக்குள் நுழைந்து, அங்கு பிரஜாவுரிமை பெற்று வசித்து வந்தவர் எனக் கூறப்படும் இலங்கைப் பிரஜை ஒருவரை ஒக்லண்ட் பொலிஸார் இன்று கைது செய்திருக்கின்றனர் என நியூஸிலாந்து வானொலி அறிவித்தது. கிரே லின் என்ற சிறு வர்த்தக முயற்சியாளர் ஒருவரே கைது செய்யப்பட்டு இன்று ஒக்லண்ட் மாவட்ட நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுகின்றார் எனக் கூறப்பட்டது.
1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரை சுவிஸில் வசித்து வந்தவர் எனக் கருதப்படும் இந்நபர் சுவிஸின் பாஸில் நகர்ப் பகுதியில் வைத்து 2000 டிசம்பரில் தனது ஜோடியான 23 வயது இளம் பெண்ணைக் கொலை செய்து விட்டு 2001 பெப்ரவரியில் போலியான அடையாளப்படுத்தல் மற்றும் பயண ஆவணங்களுடன் நியூஸிலாந்துக்குள் நுழைந்து, 2004 ஆம் ஆண்டு அந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை இந்த நபரைக் கைது செய்த சமயம், நியூஸிலாந்து உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அவருக்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டது. அதில் அவருக்கு வழங்கப்பட்ட பிரஜாவுரிமையை உள்நாட்டலுவல்கள் அமைச்சு விலக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நியூஸிலாந்துக்கும் சுவிஸுக்கும் இடையில் ஆட்களை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தம் ஏதும் இல்லாவிடினும், இந்தக் கைது நடவடிக்கையுடன் மேற்படி சந்தேகநபரை அவர் முன்னர் வசித்த சுவிஸுக்கு திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகி விட்டன என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
மேற்படி சந்தேகநபரின் அடையாளத்தை சரியாக உறுதிப்படுத்தும் முயற்சிகளை 2011 ஆம் ஆண்டிலேயே இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் இணைந்து ஆரம்பித்திருந்தனர் என்றும் கூறப்பட்டது.