சுவிட்சர்லாந்து வங்கிகளில் இனி கறுப்பு பணத்தை போட முடியாது என்று சுவிஸ் வங்கிகள் முடிவெடுத்துள்ளன.
காலம் காலமாக கறுப்பு பணத்தின் பாதுகாப்பு பெட்டகம் என்று பெயர் பெற்றது சுவிட்சர்லாந்து வங்கிகள்.
குறிப்பாக இந்தியாவில் இருந்து பலரும் வரி ஏய்ப்பு செய்த பணத்தை இந்த நாட்டு வங்கிகளில் தான் போட்டு வைத்துள்ளனர். இந்த பணம் பற்றி அவ்வப்போது சர்ச்சை கிளம்பும்.
நம் நாட்டில் இருந்து கறுப்பு பணம் இரண்டரை லட்சம் கோடி வரை சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு வாதம் இருக்கிறது. இன்னொரு பக்கம் வெறும் 75 ஆயிரம் கோடி தான் என்று இன்னொரு தரப்பில் கூறப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச கூட்டமைப்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. அப்போது வங்கிகளில் பணம் போடும் வெளிநாட்டவர் பற்றிய நிர்வாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டது.
இந்த கூட்டமைப்பில் இந்தியா உட்பட 60 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் போடுவோர் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், வரி தொடர்பான விதிகளை அமல்படுத்தவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதில் சுவிஸ், இந்தியா உட்பட 58 நாடுகள் கையெழுத்திட்டன.இந்த இரு நடவடிக்கைகளை தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாடு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எக்காரணம் கொண்டும் வரிஏய்ப்பு செய்த பணத்தை டெபாசிட் பெறக்கூடாது. மேலும் சுவிஸ் வங்கிகளில் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு பணத்தை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மாற்ற அனுமதிக்க கூடாது என்று வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது.
அரசின் ஆலோசனையை தொடர்ந்து சுவிஸ் வங்கிகள் சங்கம் சமீபத்தில் கூடியது. இதில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
*இனி எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரிஏய்ப்பு செய்த பணத்தை டெபாசிட் பெறமாட்டோம்.
*வங்கிகளுக்குள் இப்படிப்பட்ட சட்டவிரோத பணம் தொடர்பான கணக்குகளை மாற்றவும் அனுமதிக்க முடியாது.
*வரி ஏய்ப்பு செய்யும் வாடிக்கையாளர்கள் பற்றி சம்பந்தப்பட்ட நாடுகள் கேட்டால், அதிகாரப்பூர்வ அனுமதியுடன் தகவல்களை அரசு மூலம் அனுப்புவோம்.
*வங்கி கணக்கு தொடர்பான நிர்வாக தகவல்களை தருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்பட மாட்டாது.
*வரி கட்டிய பின் பணத்தை டெபாசிட் செய்யப்படுவதை வங்கிகள் உறுதி செய்யும்.